சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   திருமழிசை ஆழ்வார்  
திருச்சந்த விருத்தம்  

Songs from 752.0 to 871.0   ( )
Pages:    Previous   1  2  3  4    5  6  7  Next
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே



[812.0]
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்கொடி நெடுந்தகாய்
திரண்ட தோள்-இரணியன் சினங் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே



[813.0]
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?



[814.0]
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே



[815.0]
Back to Top
நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற்பெருந் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த-சயனன் ஆதிபூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே



[816.0]
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்கொலோ
அன்று பார் அளந்த பாத-போதை உன்னி வானின்மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே?



[817.0]
சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல்-இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக-பாத புண்ய-கீர்த்தி நும் செவி மடுத்து
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி உய்ம்மினோ



[818.0]
முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள்
மத்தராய் மயங்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வது ஓர் உபாயம் இல்லை உய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ



[819.0]
காணிலும் உருப் பொலார் செவிக்கு இனாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கு இலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதிபாற்
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே



[820.0]
Back to Top
குந்தமோடு சூலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகம் உற
வந்த வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே



[821.0]
வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே



[822.0]
போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறன் ஏறது ஊர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே



[823.0]
மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன் ஒர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த உம்பர்-ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே



[824.0]
அறிந்து அறிந்து வாமனன் அடியிணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே



[825.0]
Back to Top
ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழி ஊழிதோறு எலாம்
நின்று நின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்ச்
சென்று சென்று தேவதேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே?



[826.0]
புன் புல வழி அடைத்து அரக்கு-இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர்கொளீஇ
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே?



[827.0]
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனை
எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே



[828.0]
சோர்வு இலாத காதலால் தொடக்கு அறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலங் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே
வாரம் ஆக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே



[829.0]
பத்தினோடு பத்துமாய் ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய்
பத்து-நால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதிபால்
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே?



[830.0]
Back to Top
வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசம் ஆகி நாள் உலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே?



[831.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song